பசும்பொன்னில் அக்.30-ம் தேதி நடைபெற உள்ள தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் ஆய்வு மேற்கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன்னில் அக்டோபர் 30 ஆம் தேதி
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குருபூஜை
விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த விழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு தொடர்பான முன்னேற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து தென் மண்டல காவல்துறை தலைவர் நரேந்திரன் நாயர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் முத்துராமலிங்க தேவரின் பூர்வீக வீடு, புகைப்பட கண்காட்சி ஆகியவற்றை பார்வையிட்டார்.
தொடர்ந்து பொதுமக்கள் வந்து செல்லும் வழித்தடம், முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் வழித்தடம், காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ள கட்டிடங்கள், போலீசார் மேற்கொள்ளவுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.







