2023-ம் ஆண்டிற்கான விசிக விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு! டி.ராஜா, கே.பாலகிருஷ்ணனுக்கு விருதுகள் அறிவிப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கும் பெரியார் ஒளி விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவுக்கும், மார்க்ஸ் மாமணி விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை அசோக்…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கும் பெரியார் ஒளி விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவுக்கும், மார்க்ஸ் மாமணி விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவரும் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோர்க்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளுக்கு, அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகள் கடந்த 2007-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட்டும் வருகிறது.  அதன் அடிப்படையில் 2023 ஆண்டிற்கான விசிக – விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை அவர் வெளியிட்டார்.

அம்பேத்கர் சுடர் விருது

அம்பேத்கர் சுடர் விருது – சி.பி.ஐ (எம்.எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா-க்கு வழங்கப்பட உள்ளது.

பெரியார் ஒளி விருது

பெரியார் ஒளி விருது – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவிற்கு வழங்கப்பட உள்ளது.

காமராசர் கதிர் விருது

காமராசர் கதிர் விருது – தமிழ்நாடு சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு-விற்கு வழங்கப்பட உள்ளது.

அயோத்திதாசர் ஆதவன் விருது

அயோத்திதாசர் ஆதவன் விருது – டெல்லி மாநில முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபால் கௌதமுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

காயிதேமில்லத் பிறை விருது

காயிதேமில்லத் பிறை விருது – பெங்களூரு சட்டப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் மோகன் கோபாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்மொழி ஞாயிறு விருது

செம்மொழி ஞாயிறு விருது – தமிழறிஞர் திருமதி.தாயம்மாள் அறவாணனுக்கு வழங்கப்பட உள்ளது.

மார்க்ஸ் மாமணி விருது

மேலும் மார்க்ஸ் மாமணி விருது – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுகள் வழங்கும் விழா மே மாதம் 28ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது என்றும் நடைபெறும் இடம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.