ஐபிஎல் போட்டி தொடங்கிய முதல் 5 வாரங்களில் ஆயிரத்து 300 கோடி பார்வைகளை ஜியோ சினிமா செயலி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
2023ம் ஆண்டுக்கான 16வது ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் மதம் 31ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்கும் 16வது ஐபிஎல். டி 20 கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் நடைபெற்று வருகிறது. மே 28-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியை ஜியோ சினிமா தளம் ஒளிபரப்பு செய்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்த செயலியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே உள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான ஓடிடி செயலியான ஜியோ சினிமா, பொழுதுபோக்குக்கான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வலைத்தொடர்களுடன், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளையும் ஒளிபரப்பி வருகிறது. ‘4K ’ தரத்திலான ஒளிப்பதிவு, பல்வேறு கோணங்களிலான கேமராக்கள் என நேரடி ஒளிபரப்பின் மேம்படுத்தப்பட்ட அனுபவம் ஜியோ சினிமாவில் கிடைக்கப்பெறுகிறது. பார்வையாளர் தாம் விரும்பிய கேமரா கோணங்களில் ஆட்டத்தை ரசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டி தொடங்கிய முதல் நாளில் மட்டும் 6 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள், ஜியோ சினிமா செயலிக்கு கிடைத்த நிலையில், இதுவரை போட்டி தொடங்கிய முதல் 5 வாரங்களில் மட்டும் ஆயிரத்து 300 கோடி பார்வைகளை ஜியோ சினிமா செயலி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் சராசரியாக ஒரு பார்வையாளர் ஒரு போட்டியை கண்டுகளித்த கால அளவு 60 நிமிடங்களாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









