கொரோனா வைரஸ் தொற்று 20,000 ஆண்டுகளுக்கு முன்பே முன்னோர்களை தாக்கியிருப்பதாக என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.5 ஆண்டுகளாக உலகத்தையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா தொற்றுக்கு இதுவரை கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 லட்சம் பேருக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பாக அரிசோனா பல்கலைக் கழகத்தின் பரிணாம வளர்ச்சி உயிரியலாளர் டேவிட் எனார்டு தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வு, Current Biology என்னும் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் முடிவில், கிழக்கு ஆசியா பகுதிகளில் கொரோனா பெருந்தொற்று 20,000 ஆண்டுகளுக்கு முன்பே பரவி முன்னோர்களை தாக்கியுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த கொரோனா வைரஸ் கிழக்கு பல வருடங்கள் நீடித்ததாகவும் கூறுகின்றனர். தற்போது, உயிருடன் இருக்கும் மக்களின் டி.என்.ஏ மீது தன் அடையாளத்தை விட்டுச் செல்லும் அளவுக்கு அதன் பேரழிவு இருந்துள்ளது என்பதையும் குறிப்பிடுகிறார்கள்.
எனார்டு தலைமையிலான குழுவினர் கொரோனா வைரஸின் ஜீன்களை சோதனை செய்யாமல், மனிதர்களின் டி.என்.ஏ மீது அது ஏற்படுத்திய விளைவுகளை ஆய்வு செய்தனர். இதற்காக உலகெங்கிலும் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 2,500 பேரிடம் இருந்து பெறப்பட்ட மரபணுக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
அதில் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய கிழக்கு ஆசியா பகுதியில் வாழும் நவீன மனிதர்களிடம், முன்னோர்களுக்கு வந்த கொரோனா வைரஸின் அடையாளம் இருப்பதாக தெரியவந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.







