20 வருடங்களாக ஆட்டோ ஓட்டும் சாதனைப் பெண் – ஸ்டாண்ட் கிடைக்காமல் அலையும் அவலம்

குடும்ப சூழல் காரணமாக 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டும் பெண் தன் ஆட்டோவிற்கு  ஸ்டாண்ட் கிடைக்காமல் வழியில் கிடைக்கும் சவாரிகளை ஏற்றி சம்பாதித்து வருகிறார். பெண் என்பவள் ஒன்றை நினைத்துவிட்டால் அதை முடித்துக் காட்டுவாள்…

குடும்ப சூழல் காரணமாக 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டும் பெண் தன் ஆட்டோவிற்கு  ஸ்டாண்ட் கிடைக்காமல் வழியில் கிடைக்கும் சவாரிகளை ஏற்றி சம்பாதித்து வருகிறார்.

பெண் என்பவள் ஒன்றை நினைத்துவிட்டால் அதை முடித்துக் காட்டுவாள் என்பதற்கு
அடையாளமாக  தஞ்சையில் கணவனை பிரிந்த நிலையில் 20 ஆண்டுகாலமாக ஆட்டோ ஓட்டி தன் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் சசிகலா. அந்த ஆட்டோ ஓட்டுனர் சசிகலா
குறித்த செய்தி தொகுப்பு ஒன்றை தற்போது பார்க்கலாம்.

தஞ்சை ஆயுதப்படை மைதானம் அருகே வசித்து வருபவர் சசிகலா, தற்போது தனது தாய்
சுந்தராம்பாள், மகன்கள் இளையபாரத் மற்றும் பாலவிக்னேஷ் ஆகியோருடன் வசித்து
வருகிறார். சசிக்கலாவுக்கும் அறுமுகம் என்பவருக்கும் கடந்த 1996 ஆம் ஆண்டு
திருமணம் முடிந்தது.

கணவருக்கு ஓட்டுனர் தொழில் தெரியும் என்பதால் தஞ்சை கிருஷ்ணசாமி வாண்டையாரின் உதவியுடன் ஆட்டோ ஒன்றை தவணை முறையில்
வாங்கியுள்ளார். இந்நிலையில் கணவர் குடித்துவிட்டு தொழில் செய்யாமல் இருக்க
இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

கை குழந்தைகளுடன் செய்வதறியாது நின்ற சசிகலா, மன தைரியத்துடன் ஆட்டோவை ஓட்ட முடிவு செய்துள்ளார். பின்னர் ஆட்டோ ஓட்ட பயிற்சி எடுத்து ஓட்டுனர் உரிமம் பெற்ற
சசிகலா தஞ்சையில் 23 ஆண்டுகாலமாக வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். எவ்வளவோ
சிரமப்பட்டு தன் இரண்டு ஆண்பிள்ளைகளையும் படிக்க வைத்துவிட்டார்.

இளையபாரத் தற்போது பி.எட் முடித்து ஆசிரியர் நுழைவு தேர்வுக்கு பயிற்சி எடுத்து
வருகிறார். இரண்டாவது மகன் பாலவிக்னேஷ் ஐ.டி.ஐ முடித்து வருகிறார். 20 ஆண்டு காலமாக ஆண் துணை இன்றி தன் மகள் தான் தன்னையும் தன் பேர பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு பாதுகாத்து வருகிறார். ஆண்பிள்ளை பெற்றிருந்தால் கூட என்னை கவனிக்க யாரும் இருந்திருக்க மாட்டார்கள் என பெருமிதத்தோடு தெரிவிக்கிறார் சசிகலாவின் தாயார் சுந்தராம்பாள்.

ஆட்டோ ஓட்டி படிக்க வைத்த தாயால் தான் தற்போது அவர் கொடுத்த படிப்பு தன்
கையில் இருப்பதாக தெரிவிக்கும் இளைய பாரத் தந்தை இருந்திருந்தால் கூட இந்த
குடும்பம் இந்த நிலைக்கு ஆளாகி இருக்காது என தெரிவிக்கிறார். மேலும் சசிகலா
தனக்கு தாயாக கிடைத்தது எனக்கு கிடைத்த வரம் தெரிவித்தார் மகன் இளைய பாரத்.

இத்தனை ஆண்டு காலமாக ஆட்டோ ஓட்டியபோதும் தனக்கு தஞ்சை பெரிய கோவில் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்று கிடைக்கவில்லை என்றும், செல்லும் வழியில் கிடைக்கும் சவாரியை வைத்து தான் உழைப்பதாக தெரிவிக்கும் சசிகலா மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  தன் பிள்ளைகளுக்கு ஏதேனும் அரசு வேலை  கிடைத்தால் இனிவரும் காலங்களிலாவது நிம்மதியாக வாழ்வேன் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.