நடிகை நயன்தாராவின் 75வது படத்தின் படப்பிடிப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆசீர்வாதத்தோடு தொடங்கியது.
நடிகை நயன்தாரா நடிகர் ஜெய்யுடன் இணைந்து நடிக்கும் புதிய படத்தை ஜீ ஸ்டுடியோஸ், ட்ரைடன் ஆர்ட்ஸ் மற்றும் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 752வது படமாகும். இப்படம் கடந்த ஆண்டே சிறிய அளவிலான பூஜையுடன் தொடங்கியது.
கடின உழைப்பினாலும், தனித்துவமான நடிப்பினாலும், மிகச்சிறந்த நடிகையாக திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக ஜெட் வேகத்தில் முன்னேறியுள்ளார் நடிகை நயன்தாரா. நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைக்கதைகளை தேர்வு செய்து நடிக்கும் அவரது பாணி ரசிகர்களை மட்டுமல்ல திரைப் பிரபலங்களையும் ஈர்த்துள்ளது.
நடிகை நயன்தாரா தற்போது தனது மைல் கல்லான 75வது படத்தில் அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த புதிய படத்திற்கு தற்காலிகமாக லேடி சூப்பர்ஸ்டார் 75 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சத்யராஜ், ஜெய், ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள் என ஏற்கனவே தகவல் வெளியானது. மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என தெரிவிக்கப்பட்டது. ராஜா ராணி படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் மற்றும் நடிகர் சத்தியராஜ் ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்திர்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் நடிகை நயன்தாராவின் 75வது படத்தில் தற்போது இயக்குனர் கே எஸ் ரவிகுமார், ரேணுகா, கார்த்திக் குமார், குமாரி சச்சு, அச்சுதகுமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அராத்து பூர்ணிமா ரவி ஆகிய நட்சத்திரங்கள் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் 75 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது. இந்த விழாவில் நடிகை நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். படத்தின் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது நடிகர் ரஜினிகாந்த் கிளாப் போர்டில் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என கையெழுத்திட்டார்.
https://twitter.com/zeestudiossouth/status/1644709725014196225







