வெறி நாய் கடித்ததில் சிறுவர்கள் உள்பட 20 பேர் படுகாயம்

சேலம் அருகே கெங்கவல்லி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த வெறி நாய் கடித்ததில் 11 சிறுவர்கள் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சியில் உள்ள, 12…

சேலம் அருகே கெங்கவல்லி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த வெறி நாய் கடித்ததில் 11 சிறுவர்கள் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சியில் உள்ள, 12 வார்டுகளில் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால், அச்சமடைந்த மக்கள் நாய்களை பிடிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லையென கூறப்படுகிறது.

இதனிடையே, குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த வெறி நாய் ஒன்று, அப்பகுதியில் உள்ள பள்ளிக் கூடங்கள், பேருந்து நிறுத்தங்களில் இருந்த 11 சிறுவர்கள் உள்பட, இருபதுக்கும் மேற்பட்ட மக்களை கடித்து உள்ளது. இதில் படுகாயம் அடைந்தவர்களை, அப்பகுதி மக்கள் மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிலரை மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, மோட்டூர் அருகே சுண்ணாம்பு மேடு பகுதியில் வசிக்கும், பழனிவேல் என்பவருடைய விவசாய தோட்டத்தில், கட்டப்பட்டிருந்த ஆடுகளை வெறி நாய் கடித்தது. இதனால் ஆறு ஆடுகள் உயிரிழந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினர், வெறி நாயை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.