இந்தியாவில் மொத்தம் 20 போலியான பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாகவும், அங்கு வழங்கப்படும் பட்டங்கள் செல்லாது என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு, இந்தியாவில் செயல்பட்டு வரும் போலி பல்கலைக்கழகங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் செயல்பட்டு வரும் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக யுஜிசி செயலாலர் மணிஷ் ஜோஷி கூறுகையில், “பல்கலைக்குழு விதிகளுக்கு முரணாக ஏராளாமான நிறுவனங்கள் பட்டங்களை வழங்கி வருவதாக யுஜிசி-க்கு தெரியவந்துள்ளது. அத்தகைய பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டங்கள் செல்லாது என்றும், இந்த பல்கலைக்கழகங்களுக்கு எந்த பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை” என்றும் தெரிவித்தார்.
இதில், பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்றும், குறிப்பாக அதிகபட்சமாக டெல்லியில் 8 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 4 பல்கலைக்கழகங்கள், மேற்கு வங்கம் மற்றும் ஆந்திராவில் தலா 2 பல்கலைக்கழகங்கள், கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளாவில் தலா ஒரு பல்கலைக்கழகம் போலியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ போதி அகாதெமி உயர்கல்வி நிறுவனம் போலியானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







