ஹெல்மெட் போடவில்லை என ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். ஆட்டோவில் வடிவேலு ஹெல்மெட் அணிந்து செல்லும் போட்டோ போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் நாகூர் சிவன் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி இவரது செல்போன் எண்ணுக்கு ஹெல்மெட் அணியாததால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக குறுஞ்செய்தி வந்தது. இந்த குறுஞ்செய்தியை பார்த்த ஆட்டோ ஓட்டுநர் சாகுல் ஹமீது அதிர்ச்சி அடைந்தார்.
நாகூர் – நாகப்பட்டினம் இடையே ஆட்டோ ஓட்டும் சாகுல் ஹமீது ஆட்டோவிற்கு வேதாரண்யம் அடுத்த வாய்மேடு போலீசார் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதித்திருந்தனர். இதனையடுத்து இன்று காலை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சாகுல் ஹமீது புகார் அளித்தார்.
வாய்மேடு பகுதிக்கு செல்லாத ஆட்டோவில் ஹெல்மெட் அணியவில்லை என தனக்கு அபராதம் விதித்திருப்பதாக குற்றம் சாட்டிய சாகுல் ஹமீது சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் ஆட்டோவில் வடிவேல் ஹெல்மெட் அணிந்து செல்லும் போட்டோ போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஆட்டோ ஓட்டுநருக்கு ஹெல்மெட் போடவில்லை என அபராதம் விதித்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







