துருக்கியில் 261 மணிநேரத்திற்கு பிறகு காப்பாற்றப்பட்ட 2 இளைஞர்கள் ! மீட்கப்பட்ட மறுகணமே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

துருக்கியில் 261 மணிநேரத்திற்கு பிறகு உயிரோடு மீட்கப்பட்ட இளைஞர் ஒருவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, செல்போனில் அவரது உறவினர்களுக்கு போன் செய்து தனது பெற்றோர் உயிருடன் இருக்கின்றார்களா என்று கேட்டு தெரிந்து கொண்ட…

துருக்கியில் 261 மணிநேரத்திற்கு பிறகு உயிரோடு மீட்கப்பட்ட இளைஞர் ஒருவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, செல்போனில் அவரது உறவினர்களுக்கு போன் செய்து தனது பெற்றோர் உயிருடன் இருக்கின்றார்களா என்று கேட்டு தெரிந்து கொண்ட சம்பவம் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. மேலும் இவருடன் மற்றுமொரு இளைஞரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கையும் 45 ஆயிரத்தை கடந்துவிட்டது. இந்நிலையில், தொடந்து மீட்பு பணி நடந்து வரும் சூழலில் 11 நாட்களுக்குப் பிறகு, இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டு கிடந்த இரு
இளைஞர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை துருக்கியின் சுகாதார அமைச்சர் கோகா தற்போது பகிர்ந்துள்ளார்.

அதில் குறிப்பாக துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்த மீட்கப்பட்ட இருவரில் ஒருவர் முஸ்தபா அவ்சி (வயது 33), இவர் கள மருத்துவமனையில் ஆரம்ப சிகிச்சை பெற்ற பிறகு பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் கழுத்தில் பிரேஸ் அணிந்து ஸ்ட்ரெச்சரில் படுத்திருக்கும்போதே, பக்கத்தில் இருந்தவரிடம் செல்போன் வாங்கி அவரது உறவினருக்கு போன் செய்து தனது தாய் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பற்றி கேட்டிருக்கிறார்.

மேலும் அவர்கள் உயிரோடு இருப்பதை கேட்டறிந்து மகிழ்ந்ததோடு, தனக்கு பேசுவதற்கு செல்போன் கொடுத்து உதவிய மருத்துவ பணியாளரின் கையில் முத்தமிட்டும் மகிழ்ந்திருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்த விடியோ பதிவு தற்போது வைரலாக பரவி வரும் நிலையில், 26 வயதான மெஹ்மத் அலி என்பவரும் இவருடன் சேர்ந்து மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவ்விருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெற்று வரும் சூழலில், முஸ்தபா அவ்சி மற்றும் மெஹ்மத் அலி மீட்கப்பட்ட செய்தி ட்விட்டரில்
பகிரப்பட்டதிலிருந்து பலரது கவனத்தையும் ஈர்த்து, பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.