மறைந்த நடிகர் மயில்சாமிக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் தம்பி ராமையா வள்ளல் மாதிரி வாழ்ந்த ஒரு மனிதர் மயில்சாமி என்று உருக்கமாக கூறினார்.
தமிழ் திரையுலகில் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான தாவணி கனவுகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மயில்சாமி. தொடர்ந்து தூள், கில்லி, திருவிளையாடல் ஆரம்பம், வீரம், வீட்டுல விஷேசம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
இதையும் படிக்கவும்: மூளைசாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்; 9 பேருக்கு மறுவாழ்வு
தீவிர சிவ பக்தனான இவர் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயில் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றார். பின்னர் வீடு திரும்பும் வழியில் நெஞ்சுவலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரைபிரலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த மயில்சாமிக்கு நடிகர் தம்பி ராமையா, கிங்காங் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கிங்காங், மயில்சாமி சார் ஆரம்ப காலத்தில் இருந்து எனக்கு இனிய நண்பர். யாரேனும் ஒரு உதவி கேட்டால் எந்த நேரம் பார்க்காமல் அடுத்த நிமிடமே, அவர்கிட்ட இருக்குதோ, இல்லையோ உடனே ஏற்பாடு செய்து உதவி செய்பவர்.
சினிமா துறையில் உள்ள சிறிய நடிகர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கட்டணத்துக்கு உதவியவர். வீட்டில் மிகவும் பாசமாக இருப்பவர் அவருடைய வீட்டில் இருப்பவர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை. மயில்சாமி சார் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் என்று உருக்கத்துடன் அவரது பேச்சை நிறை செய்தார்.
தொடர்ந்து பேசிய நடிகர் தம்பி ராமையா, எம்.ஜி.ஆர் மீதும் சிவன் மீதும்ஏராளப் பற்று கொண்டவர். 58 வயதொன்றும் இறப்பதற்கான வயது இல்லை. எல்லோருக்கும் உதவ வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டிருந்தவர். நேரில் பார்க்கும் போது எப்போதுமே சுற்றி இருப்பவர்களை உற்சாகமாக வைத்திருப்பவர். எம்.ஜி.ஆர் படங்களை வாழ்க்கைப் பாடமாக கொண்டு வாழ்ந்தவர். இறக்கக் கூடாத வயது இது. வள்ளல் மாதிரி வாழ்ந்த ஒரு மனிதர் மயில்சாமி என்று உருக்கமாக கூறினார்.







