பல்லடத்தில் தமாகா வேட்பாளரின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்து விட்டு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் புகார் சொன்ன நபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி 15வது வார்டு தமாகா வேட்பாளர் பிரண்ட்ஸ் முத்துக்குமார். இவரின் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேற்று இரவு தீயில் எரிந்து கருகிக்கிடந்தன. இது குறித்து போலீசார் அந்த பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து புலனாய்வு மேற்கொண்டனர்.
இதனையடுத்து சிசிடிவி காட்சியில், தமாகா தேர்தல் அலுவலகத்துக்கு அருகே வசித்து வரும் விக்னேஸ்வரன் என்பவர், மது போதையில் இரு சக்கர வாகனங்கள் இரண்டையும் கீழே தள்ளிவிட்டு, அதிலிருந்து பெட்ரோலை எடுத்துத் தெளித்து தீ வைப்பது பதிவாகி இருந்தது. மேலும் அதே நபர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். வீட்டுக்கு அருகே இரு சக்கர வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்ததால் எரித்ததாக வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.








