முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா?- அதிமுகவில் நீடிக்கும் இழுபறி

 

இன்னும் 5 நாட்களில் கட்சியின் பொதுக் குழு கூட உள்ள நிலையில், ஒற்றை தலைமைக்கு மீண்டும் மாறுவதா அல்லது இரட்டை தலைமையை தொடர்வதா  என்கிற சர்ச்சைக்கு அதிமுகவில் இன்னும் தீர்வு காணப்படவில்லை. இந்த விவகாரத்தில் இழுபறி நீடிப்பதால் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தை சுற்றி உட்கட்சி பூசல் அனல் தொடர்ந்து தகித்துக்கொண்டிருக்கிறது.

பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைந்த பிறகு பல்வேறு திருப்பங்களையும், சர்ச்சைகளையும் கடந்து இரட்டை தலைமை என்கிற புதிய அத்யாயம் அதிமுகவில் தொடங்கியது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து கட்சியை வழி நடத்தி வந்தாலும், ஒற்றை தலைமை வேண்டும் என்கிற குரல் அதிமுகவில் அவ்வப்போது சலசலப்புகளை ஏற்படுத்தி வந்தது. சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு இந்த குரல் இன்னும் வலுவாகவே எதிரொலித்தது. ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கூட்டறிக்கைகள் வெளியிட்டுவந்த நிலையில் திடீரென தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டது இந்த சர்ச்சைக்கு மேலும் வலுசேர்த்தது. ஆனால் தற்போது இந்த விவகாரம் அதிமுகவில் பெரும் புயலையே கிளப்பியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதிமுக அலுவலகத்தில் சமீபத்தில்  நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்
பெரும்பாலான நிர்வாகிகள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற குரல் எழுப்பியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்கமாக கூறியதிலிருந்து மையம் கொள்ள தொடங்கிய இந்த புயல் தற்போது பெரும் சூறாவளியாக அதிமுகவை சுழன்றடித்துக்கொண்டிருக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இரட்டை தலைமைக்கு ஆதரவாகவும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றை தலைமைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களோடும், எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய
ஆதரவாளர்களோடும் கடந்த 4 நாட்களாக தனிதனியாக ஆலோசனை நடத்தி வருவது அதிமுக மற்றொரு அத்யாயத்திற்கு தயாராகிறதா என்கிற பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வரும்  23ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில்
நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்க தீர்மானக் குழுக் கூட்டம் இன்று கூடியது. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் ஒன்றாக இணைந்து இந்த கூட்டத்தில் பங்கேற்று சலசலப்புக்கு முற்று புள்ளி வைப்பார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில், இன்று அவ்வாறு நடைபெறாமல் பிரச்சனை மேலும் விஸ்வரூபம் அடைந்தது. காலையில் ஓபிஎஸ் வீட்டின் முன்பு இருந்த இபிஎஸ் படம் பொறிக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டதிலேயே  அதற்கான அறிகுறிகள் தெரிந்தது. இன்றும் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தங்கள் இல்லங்களில் தனித்தனியாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே எம்.ஜி.ஆர் மாளிகைக்கு வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவு  மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தின் கீழ்தளத்தில் தனியாக ஆலோசனை மேற்கொண்டார்.  பின்னர் அதிமுக தீர்மானக் குழுவிடமும் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வருகை தந்தார். அப்போது ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பதிலுக்கு ஜெயக்குமார் ஆதரவாளர்களும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் சுமார் 2 மணி நேரம் அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தள்ளுமுள்ளு, வாக்குவாதம் என அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கோரும் அளவிற்கு நிலைமை சென்றது. சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் பகுதி செயலாளர் மாரிமுத்து மீது சிலர் தாக்குதல் நடத்தியதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.  கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை ரத்தக்காயங்களுடன் நேரில் சந்தித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குறித்து அவர் புகார் தெரிவித்தாக கூறப்பட்டது.

அதிமுக தீர்மானக்குழு முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள்
அமைச்சர் ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய கருத்துக்களையே
வெளியில் தெரிவித்ததாகவும், சிதம்பர ரகசியம் ஒன்றையும் தான் சொல்லிவிடவில்லை
எனவும் கூறி  தான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தினார். தம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படமாட்டேன் என்று ஓபிஎஸ் தரப்புக்கு சவால் விடும் தொனியில் அவர் பேட்டியளித்தார். ஒற்றைத் தலைமை என்பதில் பெரும்பாலானோர் உறுதியாக இருப்பதாகவும்,  அதற்கான முடிவை கட்சித்தலைமை தான் எடுக்க வேண்டும் எனவும் கூறிய ஜெயக்குமார், தமது ஆதரவாளர் மாரிமுத்து தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்தார்.

இந்த சலசலப்புகளுக்கிடையே, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் எவை, அது குறித்து வரையறுக்கப்பட்டதா, அதன் நிலைமை என்ன என்ற கேள்வி எழுந்தது. இது பற்றி தீர்மானக் குழு உறுப்பினரான முன்னாள் அமைச்சர் பொன்னையனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது
இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை என்றும், ஆலோசனை தொடரும் என்றும் தெரிவித்தார். அதே நேரம்  அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சற்று இணக்கமாகி வருவதாகவும், கட்சியில் தற்போது நடைபெறும் பிரச்சனைகளுக்கு விரைவில் சுமூக முடிவு எட்டப்படும் என்றும்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். அவர் கூறியது ஆறுதல் வார்த்தையா அல்லது நிதர்சனமா என்பது அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகளில் தெரிந்துவிடும். ஆனால் இன்று காலையிலிருந்து எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிரடியாக நடைபெற்ற சம்பவங்கள் ஒற்றை தலைமையா, இரட்டை தலைமையா என்கிற விவகாரத்தில் அதிமுகவில் இழுபறி நீட்டிப்பதையே சுட்டிக்காட்டின.

-இலட்சுமணன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு”- கமல்ஹாசனின் விமர்சனத்துக்கு அமைச்சர் பதில்!

Jayapriya

“மேற்கு வங்கத்தில் வெற்றி உறுதி”- உள்துறை அமைச்சர் அமித்ஷா

Niruban Chakkaaravarthi

திமுகவிற்கு வெற்றியை அள்ளிக்கொடுத்த சென்னை!

Janani