மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! 12 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு!!

மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 12 பெட்டிகள் தடம்புரண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஒடகிராம் ரயில் நிலையம் அருகே பங்குரா பகுதியில்…

மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 12 பெட்டிகள் தடம்புரண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஒடகிராம் ரயில் நிலையம் அருகே பங்குரா பகுதியில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது அதிவேகமாக வந்த மற்றொரு சரக்கு ரயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 12 பெட்டிகள் தடம் புரண்டன. சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், அதிகாலை 4 மணியளவில், மெயின் லைனில் வேகமாக சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், திடீரென லூப் லைனுக்குள் நுழைந்து அங்கு நின்றிருந்த மற்றொரு சரக்கு ரயில் மீது மோதியது தெரியவந்தது. விபத்துக் காரணமாக கரக்பூர், பங்குரா, ஆத்ரா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். இரண்டு சரக்கு ரயில்களும் காலியாக இருந்ததால் பெரியளவில் பொருட்சேத இழப்பு ஏதும் ஏற்படவில்லை. அதேபோல் இந்த விபத்தில் உயிர் சேதமும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் மேற்கு வங்கத்தின் நான்கு மாவட்டங்களுக்கு இந்த வழித்தடங்கள் வழியாக ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. மேற்கு மிட்னாபூர், பங்குரா, புருலியா மற்றும் பர்த்வான் மற்றும் ஜார்க்கண்டின் மூன்று மாவட்டங்களான தன்பாத், பொகாரோ மற்றும் சிங்பூம் ஆகியவை இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகிறது. எனவே தடம் புரண்ட பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் நிலைமை சீராகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.