பாஜகவின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடன் தொடர்பில் உள்ளார்கள் என மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், அக்கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவராகவும் இருப்பவர் திருச்சி சிவா. அவரின் மகன் சூர்யா சிவா நேற்று சென்னை கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜகவில் இணைந்தார்.
திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரின் மகன், பாஜகவில் இணைந்தது பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக. உங்களுக்கு ஒரு தகவல். உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள்” என்று தெரிவித்தார். திமுக தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் திமுகவில் இணைத்துவிடுவோம் எனவும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு கோவை தெற்கு வானதி சீனிவாசன், திருநெல்வேலி நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் எம்.ஆர்.காந்தி, மொடக்குறிச்சி சி.கே.சரஸ்வதி என 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் இவ்வாறான கருத்தைத் தெரிவித்துள்ளார் செந்தில்குமார்.
இதற்கு பதிலளித்துள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், முடிந்தால் தூக்குங்கள்.. பார்க்கிறோம்… என்று குறிப்பிட்டார்.
Advertisement: