துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட 10 லட்சம் மதிப்பிலான 198.2 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து இன்று வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது துபாயிலிருந்து 182 பயணிகளுடன் விமானம் ஒன்று மதுரை விமானம் நிலையம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது சுப்புராஜ் என்பவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சுத்தியலில் மறைத்து எடுத்து வந்த ரூ.10,23,504 மதிப்பிலான 198 கிராம் தங்கம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான சுப்புராஜிடம் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.








