தமிழ்நாட்டில் 19 பேருக்கு மத்திய அரசின் சிறந்த காவலர்களுக்கான விருது மற்றும் 2 பேருக்கு குடியரசுத்தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 77-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15-ம் தேதியான நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. தற்போது பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வீரர்களின் ஒத்திகை நிகழ்வு நடைபெற்று வருகின்றன.
டெல்லியில், செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தலைமையேற்று, தேசிய கொடி ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். அந்தசமயம் ஆயுதப்படை மற்றும் டெல்லி காவல்துறை சார்பில் பிரதமருக்கு மரியாதை செலுத்தப்படும்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடெங்கும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசின் சிறந்த காவலர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் தமிழ்நாட்டில் 19 பேருக்கு மத்திய அரசின் சிறந்த காவலர்களுக்கான விருது வழங்கப்படுகிறது. மேலும் குடியரசுத்தலைவர் விருதுக்கு தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் ஐ.ஜி.பவானீஸ்வரிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.







