சுனாமி ஆழிப்பேரலைத் தாக்குதலின் 18ஆம் ஆண்டு நினைவுநாளில் உறவுகளை பறிகொடுத்தவர்கள் கடற்கரைகளில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004ஆம் தேதி டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி ஆழிப்பேரலை தாக்குதலில் தமிழக கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த துக்கநாளில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சுனாமி ஆழிப்பேரலை நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுனாமி பேரலை கோரத்தாண்டவத்தின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் சுனாமியில் பலியானவர்களுக்கு கடலில் பால் ஊற்றியும் மலர் தூவியும் உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி உள்ளிட்ட மீனவ கிராமங்களிலும் சுனாமியில் உறவுகளை பறிகொடுத்தவர்கள் உருக்கமுடன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி கடற்கரை பகுதியில் உயிரிழந்த 138 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கிறிஸ்துவ தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் 138 பேரும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்தில் கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி, நாகை ஆரிய நாட்டு தெரு, செருதூர், நாகூர், நம்பியார்நகரில் சுனாமியின் உயிர் நீத்தவர்களின் படங்களுக்கு அவர்களது உறவினர்கள் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதைப்போல் அக்கரைப்பேட்டை மீனவர்கள் நூற்றுகணக்கானோர் மெளன ஊர்வலம் சென்று சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
திமுக சார்பில் மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட திமுகவினர் துறைமுகம் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கீச்சாங்குப்பம் கிராமத்தில் சுனாமியில் உயிர்நீத்தவர்களுக்கான உறவினர்கள் திதி கொடுத்து அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
நம்பியார் நகர் மீனவ கிராம மீனவர்கள் நூற்றுகணக்கானோர் ஊர்வலம் சென்று சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதிமுக சார்பிலும் நாகை அக்கரைப்பேட்டையில் முன்னால் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நாகை மாவட்டம் முழுவதும் சுனாமி நினைவு தினம் பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் அனைத்துக் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 18ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருவதால் நாகை மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த மீனவர்களும் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் மீனவர்கள் உயிர் நீத்தவர்களுக்கு கடலில் பால் தெளித்து அஞ்சலி செலுத்தி ஆன்மா சாந்தி அடைய வேண்டி வேண்டிக்கொண்டனர்.
மேலும், சுனாமி பாதிப்பின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் அனுசரிக்கப்பட்டது. வம்பாகீரப்பாளையம், வைத்திக்குப்பம், குருசுகுப்பம்,
சோலைநகர் உள்ளிட்ட பல்வேறு கடற்கரை கிராமஙகளில் சுனாமியால்
உயிரிழந்தவர்களுக்கு ஏராளமான மீனவப்பெண்கள் மற்றும் மீனவ கிராம
பஞ்சாயத்தார்கள் மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும், கடலில் பால்
ஊற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
வைத்திக்குப்பம் மற்றும் குருசுகுப்பம் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.சுனாமி நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை , மேலும் மீன்கள் விற்பனையும் நிறுத்தப்பட்டது.
மேலும், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராம மீனவர்கள் திருமுல்லைவாசல்
பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து நினைவுத்
தூண் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சட்டமன்ற
உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமையில் ஊர்வலமாக சென்று திருமுல்லைவாசல்
கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூனிர்க்கு மலர்வளயங்கள் வைத்து மலர்கள் தூவினர்.
அதைத்தொடர்ந்து நினைவுத் தூண் அருகில் இறந்தவர்கள் நினைவாகவைக்கப்பட்டிருந்த செங்கற்களுக்கு மலர்களைத் தூவினர் அங்கு மெழுகுவர்த்திஏற்றி அஞ்சலி செலுத்தினர். இந்த ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர். இதேபோல் பழையார், கூழையார், தொடுவாய், பூம்புகார் உள் ளிட்ட மீனவ கிராமங்களில் பேரலையால் இறந்தவர்களுக்கு 1000க்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர்.