இஸ்ரேலில் மீட்கப்பட்ட 17 தமிழர்கள் சென்னை வந்தனர். அவர்களை விமான நிலையத்தில் திமுக எம்பி கலாநிதி வீராசாமி வரவேற்றார்.
இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் அஜய் சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்ட 5
சிறுவர்கள் உட்பட 23 தமிழர்கள் நேற்றிரவு டெல்லி வந்தனர். அவர்களில் 17 பேர் சென்னைக்கும், 4 பேர் கோவைக்கும், 2 பேர் மதுரைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னையை சேர்ந்தவர்கள் இன்று அதிகாலை ஏர் இந்தியா விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கு அவர்களை எம்.பி கலாநிதி வீராசாமி வரவேற்றார்.
பின்னர் திமுக எம்பி கலாநிதி வீராசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இஸ்ரேல் – பாலஸ்தீன போர் தீவிரமடைந்த நிலையில், ஒன்றிய அரசு 5 நாட்களாக அங்குள்ள இந்தியர்களை அழைத்து வருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் ஒன்றிய அரசிடமும் நம்முடைய முதல்வர் வலியுறுத்தி அவர்களை தமிழ்நாடு அழைத்து வருவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். 158 தமிழர்கள் இருப்பதாகவும், அவர்களில் 121 பேர் இதுவரை தமிழ்நாடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள நபர்கள் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும் தேவைப்பட்டால் உதவியை நாடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கும் இந்தியாவிற்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டால் அவர்களையும் மீட்டு வருவோம்.
இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் கூறியதாவது;
கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு அரசு எங்களுடன் தொடர்பில் இருந்தார்கள்
அங்குள்ள நிலை குறித்தும், எங்களின் நிலை குறித்தும் கேட்டறிந்தார்கள்.
அங்கு எல்லையில் தான் தற்பொழுது பிரச்சனை உள்ளது. அங்கு ஏவுகணை தாக்குதல்
உள்ளது , பயமான சூழல் உள்ளது. அதனால் தாயகம் திரும்பியுள்ளோம்
தமிழ்நாடு அரசிற்கு நன்றி என தெரிவித்தனர்.








