மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை வெடிக்க வாய்ப்பிருப்பதாக 17 மாதங்களுக்கு முன்பே மக்களவையில் ராகுல்காந்தி எச்சரித்திருந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் நாகா மற்றும் குக்கி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்றம் மைதேயி மக்களையும் பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் குறித்த விரிவான அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் அனுப்புமாறு மத்திய அரசிடம்
கேட்டிருந்தது. இந்த விவகாரத்தில் மைதேயி மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதோடு, மணிப்பூர் மாநில அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே 3ம் தேதி பேரணிக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பேரணியில் நாகா இன மக்களும், குக்கி இன மக்களும் திரளாக பங்கெடுத்துக் கொண்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதேயி இன மக்களும் பேரணி நடத்தியதை தொடர்ந்து வெடித்த சச்சரவில் மணிப்பூர் முழுவதும் படிப்படியாக வன்முறை களமாக மாறியது. இதன் பின்னர் மணிப்பூர் முழுவதும் ஆங்காங்கே கலவரமும், வன்முறை சம்பவங்களும் நடந்து வந்ததோடு, கடந்த 2 மாதமாக இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது. இதனைத்
தொடர்ந்து கடந்த மே 4-ம்தேதி மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த காணொலி இணையத்தில் சில தினங்களுக்கு முன் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து அரசியல் தலையீடுகள் ,கண்டனங்கள், விவாதங்கள் என அங்கங்கே அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் சூழலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில் “பிரதமர் அவர்களே, இந்த விவகாரம் நாட்டுக்கு அவமானம் மட்டும் அல்ல, மணிப்பூர் பெண்கள் மிகுந்த வேதனையையும், வலியையும் அனுபவித்து வருகின்றனர் என்பது தான் இங்கு மிக முக்கிய பிரச்னை. மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், 17 மாதங்களுக்கு முன்பே மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை வெடிக்க வாய்ப்பிருப்பதாக மக்களவையில் ராகுல் காந்தி எச்சரித்திருந்த வீடியோ ஒன்று தற்போது சமூகவலை தளங்களில் பரவி வருகிறது. உப்சாலா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அசோக் ஸ்வைன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், வடகிழக்கு மாநிலங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசும் போது “இந்த நாட்டை கட்டியெழுப்ப எனது தாத்தா 15 வருடங்கள் சிறையில் இருந்தார். என் பாட்டி 32 முறை சுடப்பட்டார், என் தந்தை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார், அதனால் நான் இந்த நாட்டைப் புரிந்து கொள்கிறேன், நான் உங்களை வாயை மூடிக்கொள்ளச் சொல்கிறேன். நீங்கள் பிரச்னையை உருவாக்குகிறீர்கள். குறிப்பாக வடக்கு கிழக்கில் பிரச்சினைகளை இப்போதே உருவாக்க ஆரம்பித்து விட்டீர்கள்” என அவர் பேசி இருந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
17 months ago, Rahul Gandhi had warned in side the Indian parliament about emerging crisis in Northeast India. The problem with megalomaniacs is that they think they know everything. Even more than the God. pic.twitter.com/QqR40L1efa
— Ashok Swain (@ashoswai) July 20, 2023
- பி.ஜேம்ஸ் லிசா








