மணிப்பூர் வீடியோ விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் 6-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

மணிப்பூர் பிரச்னை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் 6-வது நாளாக முடங்கியுள்ளது. மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல்…

மணிப்பூர் பிரச்னை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் 6-வது நாளாக முடங்கியுள்ளது.

மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்தது தொடர்பான காணொலி வெளியானது. இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே (ஜூலை 20)மணிப்பூர் பிரச்னையை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பிரச்னை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் மக்களவை இன்று கூடியதும் மணிப்பூர் பிரச்னையை விவாதிக்க கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் அவை 6-வது நாளாக முடங்கியது.

மாநிலங்களவை தொடங்கியதும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பதில் அளிக்க தொடங்கினார். ஆனால் அதனை கண்டுகொள்ளாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள் “இந்தியா இந்தியா” என கோஷமிட்டனர். இதனையடுத்து ஆளும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் “மோடி மோடி” என முழக்கமிட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

தொடர்ந்து அமளி நிலவியதால், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

 

இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் செய்தியாளர்களிடம் பேசினார். நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற அனைத்தும் குற்றங்கள் குறித்தும் விவாதிக்க  தயார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் அதனை தவிர்க்க முயன்று வருவதாக குற்றம்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.