முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 1500 பேருந்துகள் இயக்கம்!

தளர்வுகளற்ற ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக இன்றும் நாளையும் 1500 பேருந்துகளை இயக்க இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு 24 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இருந்தும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராததால், மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்துள்ளது. தளர்வுகளற்ற ஊரடங்கை முன்னிட்டு, வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், இரு நாட்களுக்கு 1500 பேருந்துகள் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கும், மாநிலத்தில் முக்கிய நகரங்களான கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே 3000 பேருந்துகளை இயக்கிட போக்குவரத்துத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூடுதலாக வரும் பட்சத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

மேற்கண்ட இரு நாட்களில் பயணிகளின் தேவைக்கேற்ப சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இரவு நேரத்தில் சிறப்புப் பேருந்துகளும் முழுமையாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஞாயிறன்று (23-05-2021) கடைசியாக புறப்படும் பேருந்துகள் பின்வருமாறு இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து மார்த்தாண்டத்திற்கு மாலை 6 மணிக்கும், சென்னையில் இருந்து நாகர்கோயிலுக்கு இரவு 7 மணிக்கும் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இரவு 7 மணிக்கும் செங்கோட்டைக்கு இரவு 7.30 மணிக்கும்
திருநெல்வேலிக்கு இரவு 8 மணிக்கும், திண்டுக்கலுக்கு இரவு 8.00 மணிக்கும் மதுரைக்கு இரவு 11.30 மணிக்கும் திருச்சிக்கு இரவு 11.45 மணிக்கும் பேருந்துகள் இயக்கப்படும்.

சிறப்புப் பேருந்துகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு விதித்துள்ள நோய்த் தடுப்பு வழிக்காட்டு நெறிமுறைகளான, கட்டாய முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்தல் போன்றவற்றை பின்பற்றியே பேருந்துகள் இயக்கப்படும். இதனை பொதுமக்கள் தவறாது பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் சென்றிட ஏதுவாக, மாநகரப் பேருந்துகள் சென்னையின் முக்கிய இடங்களில் இருந்தும் இயக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

வாக்கு எண்ணிக்கை தள்ளிவைக்கப்படுமா? தலைமை தேர்தல் அதிகாரி பதில்!

Ezhilarasan

பழைய சவாலாம்ல: அந்த விக்கெட்டுக்கு 7 வருடம் காத்திருந்த ஆண்டர்சன்

Gayathri Venkatesan

ஸ்டாலினை எதிர்த்து சீமான் போட்டி!

Niruban Chakkaaravarthi