150 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், பீரங்கிகளுடன் சென்னையில் பிரமாண்டமாக உருவாகிறது காவல் அருங்காட்சியகம்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1842 முதல் சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. 38 ஆயிரம் சதுரடி கொண்ட இந்த இடம் தொடக்கத்தில் ரூ.165க்கு மாத வாடகைக்கு விடப்பட்டது. இதனையடுத்து 1856ல் சென்னையின் முதல் காவல் ஆணையராக பொறுப்பேற்ற லெப்டினன்ட் கர்னல் பவுல்டர்சன் இந்த இடத்தை ரூ.21,000க்கு 199 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தார்.
இங்கு செயல்பட்டு வந்த காவல் ஆணையர் அலுவலகம் 2013 முதல் வேப்பேரியில் புதிய கட்டதத்தில் செயல்படத் தொடங்கியது. இதனையடுத்து பழைய கட்டடம் இடிக்கப்பட்டு புதிய குடியிருப்புகளாக மாற்ற திட்டமிடப்பட்டது. ஆனால், சென்னை மாநகர தலைமையிட கூடுதல் ஆணையரான அமல்ராஜ் புதிதாக குடியிருப்புகளை கட்டுவதற்கு பதில் காவல் அருங்காட்சியகம் அமைக்க ஆலோசித்தார். அப்போதைய டிஜிபி திரிபாதி மற்றும் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலுக்கும் தனது கருத்தை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அருங்காட்சியகம் அமைக்க இருவரும் ஒப்புதல் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து காவலர் வீட்டு வசதி வாரியத்தின் மூலம், ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு புதிய அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இந்த அருங்காட்சியகத்திற்காக நாட்டின் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் ராணுவ கேந்திரங்களிலிருந்து துப்பாக்கிகள், பீரங்கிகள் உள்ளிட்டவைகளை அமல்ராஜ் சேகரித்தார். இதன் மூலம் 150 ஆண்டுகள் பழமையான ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக சேகரிக்கப்பட்ட பழமையான ஆயுதங்களுடன் உருவாகும் முதல் காவல் அருங்காட்சியகம் சென்னையில் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








