ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு இந்தியா சார்பில் முதன்முறையாக தலைமை வகித்த பிரதமர் நரேந்திர மோடி கடல்சார் வளங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒவ்வொன்றும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும். அந்த வகையில் இந்த மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை ஏற்றது. இதன் மூலம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகித்த முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றார். கடல்சார் பாதுகாப்புக்கென பிரத்யேகமாக விவாதக் கூட்டம் நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், ஐநா அமைப்பின் முக்கிய அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கடல் வழி பாதுகாப்புக்கான திட்டங்களை பிரதமர் மோடி முன்வைத்தார். சுதந்திரமான கடல் வணிகம் தடைகளின்றி நடைபெற வேண்டும் என்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் கடல்வழி வணிகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை அமைதியாக தீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், கடல்சார் சூழல் மற்றும் கடல் வளங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
மேலும், கடல் மாசுபாடுகளை தடுப்பதிலும் அனைத்து நாடுகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். கடல்சார் வளங்களை பயன்படுத்துவதில் பாகுபாடு இல்லாமல் பொறுப்புணர்வோடு அனைத்து நாடுகளும் சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.








