நாடு முழுவதும் 1,41,986 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய பாதிப்பை விட இது 21% அதிகமாகும்.
நாடு முழுவதும் குறைந்து வந்த கொரோனா தொற்று சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று 1,41,986 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய பாதிப்பை விட இது 21% அதிகம் இதன் காரணமாக தினசரி பாதிப்பு விகிதம் 9.28%ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல 40,895 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 3,44,12,740 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்புகளை பொறுத்த அளவில் 285 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 4,83,463 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய தலைநகர் டெல்லியை பொறுத்த அளவில், 17,335 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 17.73% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 97,762 பேரின் மாதிரிகள் பரிசோதனையை செய்யப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் அதிகபட்சமாக 15,097 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்பு 17,335 ஆக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/MoHFW_INDIA/status/1479671714338328579
நாடு முழுவதும் பரவலாக தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று பாதிப்பு காரணமாக பல்வேறு மாநிலங்கள் புதியக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, அசாம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் இரவு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.
ஒமிக்ரான் தொற்று பாதிப்பை பொறுத்த அளவில் 3,071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 1,203 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 18வது தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







