குஜராத் அரசு நடத்தி வரும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனைகளில் புதிதாக பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் அமைப்பில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பச்சிளங்குழந்தைகள் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் அரசு நடத்தும் மருத்துவமனைகளில், புதிதாக பிறக்கும் குழந்தைகளை பராமரிக்கும் பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. அந்த பிரிவுகளில் கடந்த 2 ஆண்டுகளில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பச்சிளங்குழந்தைகள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, துணை முதல்வர் நிதின் பட்டேல் இந்த தகவலை தெரிவித்தார்.

இதுதொடர்பாக துணை முதல்வர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளில் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளில் 13,496 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவித்தார். புள்ளி விவரங்களின் அடிப்படையில் தினமும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் சராசரியாக 18 குழந்தைகள் இறந்துவிட்டதாக மாநில அரசு தெரிவித்தது. மேலும், அதில் அஹமதாபாத் மாவட்டத்தில்தான் அதிக அளவில் குழந்தைகளின் இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், மஹிசாகர், ஆரவல்லி, போட்டாட், ஆனந்த், மற்றும் தேவ்பூமி துவாரகா ஆகிய மாவட்டங்களில் இதுபோன்ற இறப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







