மணப்பாறை அருகே 55 நிமிடத்தில் 55 வகை இயற்கை உணவுகளை தயாரித்து, 13 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டியை சேர்ந்தவர் ஜெகநாதன்- புவனேஸ்வரி தம்பதியினர். ஜெகநாதன் தனியார் நிறுவனத்திலும், புவனேஸ்வரி தனியார் பள்ளி ஒன்றிலும் பணி செய்து வருகின்றனர். இவர்களது 13 வயது மகள் தர்ஷினி, திண்டுக்கல் தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
தர்ஷினி பாரம்பரியமான இயற்கை உணவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்பட்டி கிராமத்தில் 55 நிமிடத்தில் 55 வகையான இயற்கை உணவுகள் தயாரித்து சாதனை படைத்தார். அதில் கம்பு தோசை, ஆவாரம்பூ தோசை, துளசி தோசை, முந்திரி தோசை, மைதா- சர்க்கரை இல்லாத பானிபூரி உள்ளிட்ட 55 வகையான இயற்கை உணவுகள் இடம்பிடித்தன. உலக சாதனைக்காக 13 வயது மாணவி நடத்திய இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.







