உத்தரப்பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியின் போது நேர்ந்த விபத்தில் 13பேர் கிணற்றில் விழுந்து பலியாகியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தை சேர்ந்த நெபுவா நவுராங்கியா பகுதியில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியின் போது வந்திருந்த விருந்தினர்கள் மேடையின் கீழ் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்துள்ளனர். அந்த நிகழ்ச்சியில் அமைக்கப்பட்ட சில இருக்கைகள் அங்கிருந்த கிணற்றின் மீது பலகை கொண்டு மூடி அதன் மீது அமைக்கப்பட்டது. இரவு 8.30 அளவில் அதிகப்படியான எடையை தாங்காமல் பலகை உடைந்தது. இதில் அங்கு அமர்ந்திருந்த பலர் கிணற்றில் விழுந்தனர்.
இந்த விபத்தில் 12 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உடபட மொத்தமாக 13 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் எஸ். ராஜலிங்கம், “கிணற்றின் மேல் அமைக்கப்பட்டிருந்த பலகை அதிகப்படியான எடையை தாங்க முடியாமல் உடைந்துள்ளது. இதனால் அங்கு அமர்ந்திருந்தவர்கள் கிணற்றுக்குள் விழுந்துள்ளனர். விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “நடந்த இந்த சம்பவம் இதயத்தை பிளப்பதாக உள்ளது” என்று வருத்தம் தெரிவித்தார். மேலும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். திருமண நிகழ்ச்சியின் போது நேர்ந்த இந்த 13 உயிரிழப்புகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








