பெற்ற குழந்தையை விற்ற தாய் உட்பட 9 பேர் கைது

விருதுநகர் அருகே பெற்ற குழந்தையை விற்ற தாய் உட்பட ஒன்பது நபர்களை சூலக்கரை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். விருதுநகர் அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மனைவி…

விருதுநகர் அருகே பெற்ற குழந்தையை விற்ற தாய் உட்பட ஒன்பது நபர்களை சூலக்கரை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விருதுநகர் அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மனைவி கலைச்செல்வி. கணவர் உயிரிழந்த நிலையில் கலைச்செல்வி தனது தந்தை கருப்பசாமியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த வாரம் கலைச்செல்வி தனது ஒரு வயது பெண் குழந்தையை பணத்திற்காக விற்று விட்டதாக கிராம மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இந்த தகவல், கூரைக்குண்டு கிராம நிர்வாக அலுவலர் சுப்புலட்சுமியிடம் செல்ல, அவர், சந்தேகத்தின் அடிப்படையில் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் அறிவுறுத்தலின்படி தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் கலைச்செல்வி மற்றும் கருப்பசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் சம்மந்தப்பட்டவர்களை பல்வேறு பகுதிகளில் தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார் இன்று (17.02.2022) காலை மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தில் குழந்தையை மீட்டனர். தொடர்ந்து குழந்தையின் தாய் கலைச்செல்வி, தாத்தா கருப்பசாமி, விலைக்கு வாங்கிய தம்பதியினர் கருப்பசாமி -பிரியா, இடைத் தரகராக செயல்பட்ட கார்த்திக், நந்தகுமார், மகேஸ்வரி, மாரியம்மாள் மற்றும் கார் ஓட்டுநர் செண்பகராஜன் உள்ளிட்ட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ. 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணை முடிவிற்கு பின் குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.