பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், பருத்தி விலை உயர்வு, செயல்பாட்டு செல்வுகள் அதிகரிப்பு, தேவையில் ஏற்பட்டுள்ள சரிவு போன்ற காரணமங்களால் தமிழ்நாட்டில் கடந்த 15ஆம் தேதி முதல் நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தத்தை அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதே பிரச்னை தொடர்பாக கடந்த மே மாதம் 16 ஆம் தேதி கடிதம் எழுதியதையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், 15 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நூற்பு முதல் துணிகள் வரையிலான ஜவுளித் தொழிலை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
நூற்பாலைத் துறைக்கு உதவும் வகையில் அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின்கீழ், உரிய நிதியுதவியை வழங்கிடவும், அந்நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின்கீழ் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தினை மேலும் ஓராண்டு நீட்டிக்கவும் வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
ஏற்கெனவே பெற்ற கடனை 6 ஆண்டு காலக் கடனாக மாற்றி திருத்தியமைத்திடவும், இத்திட்டத்தின்கீழ் புதிய கடன்கள் வழங்கிடவும், இக்கடன்களுக்கான வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்திடவும் வேண்டும் என்றும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பருத்தி மீதான 11 விழுக்காடு இறக்குமதி வரியைத் திரும்பப் பெறவேண்டுமென்றும், அதன்மூலம் உற்பத்திச் செலவைக் கணிசமாகக் குறைக்கலாம் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவிலிருந்து கழிவுப் பருத்தியை ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா







