ஜம்மு காஷ்மீரில் 43 ஆண்டுகளில் இல்லாத கனமழை: வைஷ்ணவி தேவி கோயிலின் புதிய பாதை மூடல்!

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் புதிய பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.  டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில்…

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் புதிய பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் வரலாறு காணாத அளவு மழை பெய்து வருகிறது. அதேபோல இமாச்சல பிரதேசத்தில் இடைவிடாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரவி, பியாஸ், சட்லுஜ், ஸ்வான் மற்றும் செனாப் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்ரா நகரில் கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. வைஷ்ணவி தேவி சன்னதிக்கு வருகை தரும் பக்தர்களுக்கான அடிப்படை முகாம் அமைந்துள்ள கத்ரா நகரில் கடந்த 24 மணி நேரத்தில் 315.4 மிமீ மழை பெய்துள்ளது என்று அக்கோயிலின் தலைமை நிர்வாக அதிகாரி அன்ஷுல் கார்க் தெரிவித்தார்.

எனவே கோயிலுக்கு செல்லும் பயணிகள் பழைய பாதையான திரிகுடா மலையில் சென்று கோயிலை அடைய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நிலச்சரிவு அபாயத்தைக் கருத்தில் கொண்டு வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் புதிய பாதை மூடப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக ஹெலிகாப்டர் சேவையும் தடை செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.