மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவிகளின் வங்கிக் கணக்கில், ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதி தலா ஆயிரம் ரூபாய் வரவு வைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்காக மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. மாணவிகளின் விவரங்களான வங்கிக் கணக்கு , ஆதார் எண், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் சுமார் 6 லட்சம் மாணவிகள் பயன்பெறும் வகையில் நடப்பாண்டுக்கு மட்டும் ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டம் முழுவதுமாக ஆன்லைனில் மட்டும் செயல்படுத்தப்படும் என்றும், இந்த திட்டத்தின் கண்காணிப்பாளராக சமூக நலத்துறையின் இயக்குநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த திட்டத்தை முறைப்படி செயல்படுத்தவும், தொடர்ந்து கண்காணிக்கவும் மாநில அளவில் தலைமைச் செயலாளர் தலைமையிலும் மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையிலும் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநில அளவில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் நிதி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முதன்மைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுவார்கள். மாணவிகள் கல்லூரி மேல் படிப்பை பயில்கின்றனரா என்பதை ஒவ்வொரு ஆறு மாதமும் உயர்கல்வித்துறை சார்பாக உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







