ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலிகமேனியின் உடல் ஜூலை 9 ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது, அமெரிக்க அதிபர் டிரம்பை கொலை செய்யக் கோரும் முழக்கங்கள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் டிரம்ப்பைக் கொலை செய்ய ஈரான் ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளதாக இஸ்ரேல் உளவுத்துறை அமெரிக்காவிடன் பகிர்ந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியை, அதாவது என்னை படுகொலை செய்யவோ அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபடவோ ஈரான் அரசாங்கம் துணிந்தால் (உலகெங்கிலும் பல இடங்களில் அத்தகைய அச்சுறுத்தலை அவர்கள் விடுத்துள்ளனர்), அதைத் தொடர்ந்து உடனடியாக ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் பாய்ந்து வரும் வகையில், 1000 ஏவுகணைகள் ஈரானை நோக்கித் தயார் நிலையில் குறிவைக்கப்பட்டுள்ளன.
ஈரானின் அனைத்துப் பகுதிகளையும் முற்றிலுமாகச் சிதைத்து அழிப்பதற்கான உத்தரவுகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுவிட்டன; இதற்கான முழுத் திறனும் விருப்பமும் தயார்நிலையும் அமெரிக்க ராணுவத்திடம் உள்ளன (இந்த நடவடிக்கை ஓராண்டு காலத்திற்கு மேற்கொள்ளப்படும், தேவைப்பட்டால் நீட்டிக்கப்படலாம்)” என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ஈரானுடனான அமைதி பேச்சுவார்த்தை கைவிடப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




