பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட குஜராத் தொங்கு பாலம் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் பழமையானது.
குஜராத் மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரக் கூடிய மோர்பி தொங்கு பாலம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட பழமையான இந்த பாலம் மோர்பியில் உள்ள மச்சு ஆற்றின் மீது நவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது.
மோர்பிக்கு தனிச்சிறப்பான அடையாளத்தை வழங்கும் நோக்கத்துடன் கட்டப்பட்ட இந்த ஊஞ்சல் பாலம் ஒரு பொறியியல் அதிசயமாக போற்றப்பட்டது. 1.25 மீட்டர் அகலமும், 233 மீட்டர் நீளமும் கொண்ட இந்த பாலம், மச்சு ஆற்றில் உள்ள தர்பார்கர் அரண்மனை மற்றும் லக்திர்ஜி பொறியியல் கல்லூரியை இணைக்கக் கூடியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையடுத்து, மக்களின் பயன்பாட்டுக்காக குஜராத்திலன் புத்தாண்டு தினமான கடந்த 26-ந் தேதி பாலம் திறந்து வைக்கப்பட்டது.
இந்தநிலையில், விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது அவர்களின் எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதையடுத்து, பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் உடனடியாக விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த நிலையில், சிலர் மீட்கப்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்க பட்டதாகவும் அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்தார். ஆற்றில் விழுந்த சிலர் அங்கிருந்த வயரை பிடித்தபடி உயிர் பிழைத்ததாகவும், அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியதே விபத்துக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
பாலம் அறுந்தபோது சுமார் 100க்கும் மேற்பட்டோர் பாலத்தில் இருந்ததாகவும், ஆற்றில் விழுந்தவர்களில் 177 பேர் வரை மீட்கப்பட்டு விட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.