“100 ஆண்டுகள் நம்மிடம் தோற்றவர்கள்தான் ஆர்எஸ்எஸ். ஆனால்
இன்று 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துளிர்த்து வருகின்றனர். மகாத்மா
காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு, படேல் வழியில் நின்று துடைத்தெறியதான்
ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் ராகுல் காந்தி பாத யாத்திரை தொடர்பான மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், விஜயதாரணி, ஜோதிமணி, திருநாவுக்கரசர் மற்றும் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முரளிதரன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:
நம்முடைய எதிரிகள் வலிமையானவர்கள். நம்முடைய எதிரிகள் அறிவு கூர்மையானவர்கள். ஆயுதங்களை ஏந்தி போராடினாலும் போராடியக் கூடியவர்கள். அறிவை பயன்படுத்தி போராடினாலும் போராடிய கூடியவர்கள்.
எனவே அவர்களை எதிர்ப்பது சாதாரண பணி அல்ல. மகாத்மா காந்தி இந்திய அரசியலுக்கு வருவதற்கு முன்பே ஆர்எஸ்எஸ் ஏதாவது ஒரு பெயரில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த நினைத்துள்ளனர்.
ஆனால் இந்திய மக்கள் அவர்களை தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளனர். அதன் பிறகுதான் மகாத்மா காந்தி வந்து முற்றிலுமாக அவர்களை தோற்கடித்தார். தொடர்ந்து அவர்களை தோற்கடித்து அப்புறப்படுத்தி வந்தோம். ஆனால் நூறு ஆண்டுகள் நம்மிடம் தோற்றவர்கள்தான் இன்று இருபது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துளிர்த்து வருகின்றனர்.
எனவே அவர்களை மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு, படேல் ஆகியோர் வழியில் நின்று துடைத்தெறிய வேண்டும். அதற்காக தான் ராகுல் காந்தி இந்த பிரசார நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். எனவே பெரும்பாலான தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்துத்து பேசிய அவர், “வருகிற 7-ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ராகுல் காந்தி பிரசார நடைபயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் நோக்கி பிரசார பயணம் நடைபெற உள்ளது. 7-ம் தேதி முதல் 10ம் தேதி வரை 3 நாட்களும் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் நடை பயணத்தில் 10,000 பேர் கலந்து கொள்கின்றனர். இந்த நடைப் பயணம் ஆர்எஸ்எஸ்-இன் தவறான தத்துவத்தை எதிர்த்தும், பாஜகவின் வீழ்ச்சி தரும் பொருளாதாரத்தை எதிர்த்தும், இந்தியாவில் மனிதர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற காந்திய தத்துவத்தை வலியுறுத்தி இந்த நடை பயணம் நடைபெற உள்ளது” என்றார்.








