“நகரில் சீரியல் கில்லர்” என பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளை கடுமையாகச் சாடியுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவால், வரும் திங்கட்கிழமை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டியுள்ளார். பாஜகவைப் பற்றி கடுமையாகச் சாடி சட்டப்பேரவையில் அவர் பேசியதாவது:
“கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா, அசாம், மத்தியப் பிரதேசம், பீகார், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களின் அரசுகளை பாஜக இன்று வரை கவிழ்த்துள்ளது”
என அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. ஆம் ஆத்மி அரசு திங்கள்கிழமை நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வருகிறது. பாஜக இதுவரை 277 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியுள்ளது. ஜிஎஸ்டி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றின் மூலம் வசூலிக்கப்பட்ட பணத்தை சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பயன்படுத்தியுள்ளது.
277 எம்எல்ஏக்களை பாஜக இதுவரை விலைக்கு வாங்கியுள்ளனர். இப்போது ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ரூ.20 கோடி என்றார், ரூ.5,500 கோடிக்கு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். பணத்தைப் பயன்படுத்தி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதால் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து 14 மணி நேரம் நடந்த சோதனையில் ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. நகைகள் எதுவும் கிடைக்கவில்லை, பணம் இல்லை, எந்த நிலம் அல்லது சொத்து பற்றிய ஆவணங்களும் கிடைக்கவில்லை, குற்றவியல் ஆவணமும் கிடைக்கவில்லை. எதுவும் கிடைக்கவில்லை. அது பொய்யான ரெய்டு.
டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா தற்போது டெல்லி அரசு நடத்தும் பள்ளிகளில் விசாரணையை தொடங்கியுள்ளார். நல்ல திட்டங்களை நிறைவேற்ற விடாமல் மத்தியில் ஆளும் பாஜக அரசு தடுக்கிறது என்றார் அரவிந்த் கெஜரிவால்.








