100% சாதிவாரி இடப்பங்கீடு என்ற இலக்கை எட்ட சமூகநீதி நாயகன் வி.பி.சிங்கின் பிறந்தநாளில் மீண்டும் உறுதியேற்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மாபெரும் அரசியல் சக்தியாகத் திகழ்ந்தவர். சுதந்திர இந்தியாவின் ஏழாவது பிரதமராகப் பதவி வகித்தவர். தனது பிரதமர் பதவியையே விலையாக கொடுத்து பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்தியவர். அதற்காக இட ஒதுக்கீட்டுப் போராளி என கொண்டாடப்பட்டவர். காங்கிரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டவர் என பல சிறப்புகளையும், பெருமைகளும் கொண்டவர்தான் வி.பி.சிங். இந்திய அரசியலில் தனித்தன்மை கொண்ட ஆளுமைகளுள் ஒருவரான இவர் 1931 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25- ஆம் தேதி அலகாபாத் நகரில் செல்வாக்கு மிக்க ஒரு அரச குடும்பத்தில் ராம்கோபால் சிங் – ராதாகுமாரி தம்பதியருக்கு 2வது மகனாக பிறந்தவர். இன்று இவரின் 91 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுளளார். அதில் சமூகநீதி தளத்தில் என் மனம் கவர்ந்தவர்களில் ஒருவரும், எனது நண்பருமான முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 93-ஆம் பிறந்தநாள் இன்று. இந்தியா விடுதலை அடைந்த நாளில் இருந்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை எதிர்ப்பு சுனாமிகளை புறம்தள்ளி செயல்படுத்தியவர்; அதனால் ஆட்சிக் கட்டில் பறிக்கப்பட்டதை அலட்சியம் செய்தவர்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில், மக்கள்தொகைக்கு இணையான அளவில் இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். ஆனால், பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த 50% உச்சவரம்பு தான் அதற்கு தடையாக இருந்தது. உயர்வகுப்பு ஏழைகளுக்காக இட ஒதுக்கீட்டு வழக்கில் அந்த உச்சவரம்பு தகர்க்கப்பட்டு விட்ட நிலையில், இடஒதுக்கீடு என்ற தத்துவத்தை ஒதுக்கி வைத்து விட்டு, இடப்பங்கீடு என்ற தத்துவத்தை பின்பற்ற வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் 100% சாதிவாரி இடப்பங்கீடு என்ற சமூகநீதி இலக்கை அடைவது தான் நமது லட்சியமாக இருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி பயணிக்கவும், போராடவும் சமூகநீதி நாயகன் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாளில் நாம் அனைவரும் மீண்டும் உறுதியேற்போம் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள த்விட்டேர் பதிவில், விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் சமூகநீதியை தழைக்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர்களில் அண்ணல் அம்பேத்கருக்கு அடுத்த முதன்மையானவர் வி.பி.சிங். அரச குடும்பத்தில் பிறந்தாலும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு இட ஒதுக்கீடு முக்கியம் என்பதை உணர்ந்து மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கியவர் அவர். வி.பி.சிங் அவர்களின் 93-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் சமூகநீதி தழைக்கவும், சமூகநீதிக்கொடி உயரப் பறப்பதை உறுதி செய்யவும் நாம் உழைக்க வேண்டும். அதுவே சமூகநீதி நாயகனுக்கு நாம் செலுத்தும் சிறந்த மரியாதை என தெரிவித்துள்ளார்.
சமூகநீதிக் கொடியை உயரப் பறக்கச் செய்வதே வி.பி.சிங் அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை:
விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் சமூகநீதியை தழைக்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர்களில் அண்ணல் அம்பேத்கருக்கு அடுத்த முதன்மையானவர் வி.பி.சிங். அரச குடும்பத்தில்… pic.twitter.com/JeFdCZw4Vd
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 25, 2023
- பி.ஜேம்ஸ் லிசா









