தமிழ்நாட்டில் புதிய ரேசன் அட்டை கோரி கடந்த 5 மாதங்களில் 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அரசின் சலுகைகளை பெற ரேசன் அட்டை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. சமீபத்தில் கொரோனா நிவாரண நிதியாக அரசு வழங்கிய நிவாரண நிதியை பெற ரேசன் அட்டை கட்டாயமாக தேவைப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் புதிய ரேசன் அட்டை கோரி கடந்த 5 மாதங்களில் 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் மட்டும் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் புதிய ரேசன் அட்டை கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்சென்னையில் 67 ஆயிரம் பேர் புதிய ரேசன் அட்டைகள் கோரி விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்தவர்களில் 93 சதவீதம் பேருக்கு புதிய அட்டை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் புதிய ரேசன் அட்டைகளை வழங்க தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. தகுதியில்லாத 2 லட்சத்து 61 ஆயிரத்து 844 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







