‘கலைஞரின் ‘வருமுன் காப்போம்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் தொடங்கி வைத்தார்.
சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் இன்று அவர் சேலம் வந்தார். வாழப்பாடியில் ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொது மருத்துவம், இருதய சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவ பிரிவு உள்ளிட்ட 17 பிரிவுகளை உள்ளடக்கிய திட்டமாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் திகழும் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், இத்திட்டத்தின் கீழ் ஆயிரத்து 250 மருத்துவ முகாம்களைவும் அவர் தொடங்கினார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் துறை, போக்குவரத்து துறை, பள்ளிக்கல்வித்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 55 கோடியை 26 லட்சம் ரூபாய் மதிப்பில் முடிவடைந்த பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதனைத்தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 23 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 13 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.







