நிகழாண்டில் அமெரிக்கா செல்ல 10 லட்சம் விசா பெற்ற இந்தியர்கள்! விசா பெறுபவா்களில் 10 சதவீத பங்கை வகிக்கும் இந்தியா!

இந்தியாவில் நிகழாண்டில் 10 லட்சம் குடியேற்றம் அல்லாத விசா விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் இலக்கை அமெரிக்க தூதரகங்கள் வியாழக்கிழமை கடந்துள்ளன. மேலும், அமெரிக்க நுழைவு இசைவு பெறுபவா்களில் 10 சதவீத பங்கை இந்தியா வகிப்பதாக அமெரிக்க தூதரகம்…

இந்தியாவில் நிகழாண்டில் 10 லட்சம் குடியேற்றம் அல்லாத விசா விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் இலக்கை அமெரிக்க தூதரகங்கள் வியாழக்கிழமை கடந்துள்ளன. மேலும், அமெரிக்க நுழைவு இசைவு பெறுபவா்களில் 10 சதவீத பங்கை இந்தியா வகிப்பதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

கரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்குப் பிறகு, இந்தியாவில் அமெரிக்க விசா வழங்கலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியா்கள் விசாவுக்காக நீண்ட காலம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தியாவில் விசா விண்ணப்பங்கள் பரிசீலனையை துரிதப்படுத்துவதற்கான நவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியது. அதன் மூலமாக, கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 12 லட்சம் பேர் குடியேற்றமல்லாத விசா பெற்று அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளனர்.

நிகழாண்டில் 9 மாதங்களிலேயே 10 லட்சம் விசா அனுமதி இலக்கை அமெரிக்க தூதரகங்கள் கடந்துள்ளன. டெல்லி அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அமெரிக்காவின் கேம்ப்ரிட்ஜில் அமைந்துள்ள மசசூஸட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (எம்ஐடி) தனது மகனின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்லும் இந்திய தம்பதிக்கு இந்த 10 லட்சமாவது விசா வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் இவா்கள் அமெரிக்கா செல்லவுள்ளனர்.

இந்த தம்பதியுடன் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் காா்செட்டி கலந்துரையாடி, அவா்களின் அமெரிக்க பயணத் திட்டம் குறித்தும் கேட்டறிந்தார். அவா்களுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு அமெரிக்க தூதர் கூறுகையில், ‘அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவு உலகிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாட்டு மக்களிடையேயான உறவும் முன்பைவிட வலுவடைந்துள்ளது. இந்தியர்களுக்கு கூடுதல் நுழைவு இசைவு அனுமதியை அளிப்பதற்கு வரும் மாதங்களில் அமெரிக்க தூதரகம் தொடா்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும்’ என்றார்.

இதுகுறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அமெரிக்கா செல்வதற்காக பெறப்படும் அனைத்து வகை விசாக்களில் இந்தியர்கள் மட்டும் தற்போது 10 சதவீத விசாக்களைப் பெற்று வருகின்றனர். இதில் 20 சதவீதம் அனைத்து வகை மாணவர் விசாக்களும், 65 சதவீதம் அமெரிக்காவில் தற்காலிகமாக பணி புரிவதற்கான (ஹெச், எல்) விசாக்களும் அடங்கும். இந்தியாவில் விசா வழங்கலை துரிதப்படுத்தும் விதமாக, ஊழியா்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதோடு உள்கட்டமைப்பு வசதிகளையும் அமெரிக்க தூதரகம் மேம்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஹைதராபாதில் புதிதாக துணைத் தூதரக கட்டடம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், புதிய விசா அனுமதி வகைகளுக்கு நேர்காணல் விலக்கு தகுதியை நீட்டிக்கவும், இந்தியர்களின் விசா விண்ணப்பங்களை பரிசீலிக்க உலகம் முழுவதும் உள்ள ஊழியா்கள் தொலைநிலை வழியில் பங்களிப்பாற்றச் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தகுதியுடைய தற்காலிக பணி விசா விண்ணப்பதாரர்கள் தங்களின் விசா புதிப்பித்தலை உள்நாட்டிலேயே மேற்கொள்ளும் வகையிலான முன்னோடித் திட்டம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்த தூதரம் திட்டமிட்டுள்ளது. நிகழாண்டில் 3 மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில், இந்தியர்களுக்கான விசா அனுமதி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.