ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பகுதியில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் 200-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில், சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்பு பணிகள் நேற்று நிறைவடைந்த நிலையில், தற்போது தண்டவாளத்தில் இருந்து ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. தண்டவாளத்தை சரி செய்து ரயில் போக்குவரத்திற்கு தேவையான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, சீரமைப்பு பணிகளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 2-வது நாளாக ஆய்வு செய்தார். அப்போது, பேசிய அவர், விபத்துக்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றத்தால் ரயில் விபத்து நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கேட்டறிந்தார். சம்பவ இடத்திற்கு 2ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்டுள்ள அவரை, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, சீரமைப்பு பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், இனி எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா









