10.5% இடஒதுக்கீட்டுக்கு புதிய சட்டம் கொண்டு வர வேண்டுமென முதலமைச்சரிடம் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், 10.5 சதவிகித இடஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாமக இளைஞரணி அன்புமணி இராமதாஸ் தலைமையில் 7 பேர் கொண்ட குழு இன்று சந்தித்தனர். வன்னியர் இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த கூடுதல் புள்ளி விவரங்களைத் திரட்டி புதிய சட்டம் கொண்டு வர வலியுறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, உச்சநீதிமன்ற தீர்ப்பின் சாதகமான அம்சங்களை வைத்து அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்காக முதலமைச்சரை சந்தித்தோம். முதலமைச்சருடன் நல்லபடியாக சந்திப்பு முடிந்தது என்று தெரிவித்தார். சமூக நிலையை அடிப்படையாக வைத்து இட ஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மீண்டும் ஒரு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சர் நிச்சயமாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து சாதமான நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார், இந்த கூட்டத் தொடரிலேயே கொண்டு வந்தால் மகிழ்ச்சி எனவும் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டில் வரும் ஜூலை மாதத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை தொடங்கப்படவிருக்கிறது அதைக் கருத்தில் கொண்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக புதிய சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி பாட்டாளி மக்களுக்கு உரிய சமூகநீதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.








