சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான திரைப்படம். இந்த திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது.
அமேசான் ப்ரைமில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் சூரரைப்போற்று படத்திற்கு அயல்நாட்டு திரைப்பட விழாவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. 2021 ஆண்டு பிப்ரவரி மாதம் கலிஃபோர்னியாவில் நடைபெற உள்ள 78வது கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்கிற பிரிவில் போட்டியிட ‘சூரரைப்போற்று’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை 2டி நிறுவனத்தின் ராஜசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.







