அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியா, வெள்ளை மாளிகையில் வசித்த காலம் குறித்து புத்தகம் எழுத திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்ததை அடுத்து, வரும் ஜனவரி 20ஆம் தேதிக்குப் பின்னர் அவரும், அவரது மனைவி மெலனியாவும் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுகின்றனர். இதனையடுத்து அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் வசித்த காலம் குறித்து புத்தகம் ஒன்றை மெலனியா ட்ரம்ப் எழுத உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக பேஜ் சிக்ஸ் என்ற பதிப்பக நிறுவனத்துடன் மெலனியா ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதற்கு முன்பு மெலனியாவின் மூத்த ஆலோசகராக வெள்ளை மாளிகையில் பணியாற்றிய ஸ்டீபனி வின்ஸ்டன் வோல்காஃப் தமது வெள்ளை மாளிகை காலம் குறித்து புத்தகம் எழுதினார். இது மிகுந்த பரபரப்புடன் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.







