மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் அனைத்து போராட்டங்களுக்கும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு தெரிவிப்பதாக அதன் தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தலைமையேற்ற சங்கத்தின் மாநில தலைவர் விக்கிரமராஜா புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பேசினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வணிகர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவது போல் வணிகர்களுக்கும் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.







