கேரள மாநிலம் திருவனந்தபுரம் கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் வலையில் சிக்கிய திமிங்கல சுறாவை மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் விடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வங்கக்கடல், இந்தியப்பெருங்கடல், அரபிக்கடல் பகுதிகளில் விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்லாமல் கரையோரங்களில் மீன் பிடித்து வருகின்றனர். இதில் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் கடற்பகுதியில் மீனவர்கள் நேற்று மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது மீனவர் ஒருவர் விரித்திருந்த வலையில் சுமார் 1000 கிலோ எடையுள்ள சுறா வகையை சேர்ந்த திமிங்கல சுறா ஒன்று சிக்கியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் திமிங்கல சுறாவை மீண்டும் கடலுக்குள் விடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 60 மீனவர்கள் இணைந்து திமிங்கல சுறாவை வெற்றிகரமாக கடலுக்கும் அனுப்பிவைத்தனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இது தொடர்பாக தெரிவித்துள்ள ரேஞ்ச் அதிகாரி ஷாஜி ஜோஸ், திமிங்கல சுறா ஒரு ஆபத்தான உயிரினம், அதனை கடலுக்குள் பத்திரமாக அனுப்பிய மீனவர்களிடம் நாங்கள் பேசினோம், அவர்களை பாராட்டினோம். மீனவர்களின் செயலை ஊக்குவிக்கும் வகையில் வனத்துறை சார்பில் அவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.







