விருதுநகர் மோட்டார் வாகன ஆய்வாளர் காரில் 100 சவரன் நகைகள் மற்றும் லட்சக் கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட எல்லையான சத்திரரெட்டியபட்டியில் உள்ள சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணிபுரியும் கலைச்செல்வியும், அவரது கணவர் ராஜாவும் சென்ற காரை சோதனை செய்தனர். அதில் இருந்த 24 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 100 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், தொடர்ந்து மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரியும் சண்முக ஆனந்த் வந்த காரையும் சோதனை செய்த அதிகாரிகள் அதிலிருந்து 1.43 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அதே காரில் இருந்த விருதுநகர் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் அருள் பிரசாத் என்பவரிடமிருந்து 7 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அனைவரையும் விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







