மரக்காணத்தில் 14 பேரின் உயிரைப் பறித்த விஷ சாராய சம்பவத்திற்கு காரணமான
மெத்தனால் விற்பனை செய்த புதுச்சேரியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 13-ந் தேதி மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்த சம்பவத்தில் 14 பேர்
உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளார்கள், அதே நேரத்தில்
செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்திய 6 பேர் என
மொத்தம் தமிழகத்தில் இந்த சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்திய போலீசார் தொழிற்சாலைகளுக்கு
பயன்படுத்தப்படும் மெத்தனாலை தண்ணீர் கலந்து சாராயமாக விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். இது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்த நிலையில் புதுச்சேரியை சேர்ந்த ஏழுமலை என்பவர் தான் மெத்தனால் கெமிக்கல் கொடுத்து உதவியது தெரியவந்தது.
ஏழுமலை வில்லியனூரை அடுத்த கரசூரில் கெமிக்கல் விற்பனை செய்யும் தொழிற்சாலை
நடத்தி வந்துள்ளார். அந்த தொழிற்சாலைக்கு வந்த மெத்தனாலை தான் சாராய
வியாபாரிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து நேற்று இரவுபுதுச்சேரிக்கு விரைந்த தமிழ்நாடு போலீசார் ஏழுமலை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பர்கத் அலி ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஏழுமலை புதுச்சேரி திமுக பிரமுகரும், திமுக அமைப்பாளரும்
எதிர்கட்சி தலைவருமான சிவாவின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.







