மதுரையில் சுவர் விளம்பரத்தால் அதிமுக – பாஜக இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பாசன கால்வாய் பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில், கடந்த 28ம் தேதி மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு வரவேற்பு தெரிவித்து சுவர் விளம்பரம் செய்திருந்தனர்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் முருகன் தலைமையில் நடைபெறும் வேல்யாத்திரைக்கு வரவேற்பு தெரிவித்து சுவர் விளம்பரம் செய்வதற்காக, அதிமுகவினர் வரைந்திருந்த சுவர் விளம்பரத்தை அழித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அதிமுக நகர செயலாளர், பாஸ்கரன் தலைமையில் வந்த அதிமுகவினர் அங்கிருந்த பாஜகவினரிடம், சுவர் விளம்பரம் நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். இதனால் இரு தருப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் இருகட்சியினரும் அங்கு குவிந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், நிலமையை சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் இருதரப்பினர் இடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு பிரச்சனை ஏற்படாமல் தடுத்தனர்.







