நீட் தேர்வில் வெற்றிபெற்று மறைந்த தந்தையின் கனவை நிறைவேற்றிய கிராமப்புற மாணவி!

மறைந்த தந்தையின் கனவை நிறைவேற்ற விடாமுயற்சியால் உழைத்து, நீட் தேர்வில் வெற்றிபெற்று அரசு மருத்துவ கல்லூரியில் இடம்பிடித்த கிராமப்புற ஏழை மாணவியை கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்…

மறைந்த தந்தையின் கனவை நிறைவேற்ற விடாமுயற்சியால் உழைத்து, நீட் தேர்வில் வெற்றிபெற்று அரசு மருத்துவ கல்லூரியில் இடம்பிடித்த கிராமப்புற ஏழை மாணவியை கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள தோப்புபட்டியைச் சேர்ந்தவர் கந்தன். இவர் விவசாய கூலி வேலை செய்து வந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர், தன்னுடைய மகள் சண்முகபிரியாவை நிலக்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளார். சண்முகபிரியாவும் நன்கு படித்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1118 மதிப்பெண் பெற்றுள்ளார். பின்னர் தனது மகளை மருத்துவராக்க வேண்டும் என்ற ஆசையில் கந்தன், நிலக்கோட்டையில் 1977ம் ஆண்டை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் அமைப்பு நடத்திய இலவச நீட் பயிற்சி மையத்தில் பயிற்சிக்கு சேர்த்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சண்முகபிரியாவின் தந்தை விபத்தில் மரணமடைந்ததையடுத்து, அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியது.

பின்னர் தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற விடா முயற்சியுடன் படித்து, நீட் தேர்வை எதிர்கொண்டு 609/720 மதிப்பெண் பெற்று, மதுரை மருத்துவக் கல்லூரியில் பொதுப்பிரிவில் தேர்வாகி சேர்ந்துள்ளார். இவரது விடா முயற்சிக்கு கிராம மக்கள் மற்றும் 1977 – முன்னாள் மாணவர்கள் அமைப்பு நீட் பயிற்சி மையத்தில் வீட்டிற்கே சென்று பாரட்டினர். மேலும் மருத்துவப் படிப்பு முடியும் வரை எந்த உதவி தேவை என்றாலும் தங்கள் அமைப்பு உதவ தயார் என்றும் உறுதியளித்தனர். அடிப்படை வசதியே இல்லாத குக்கிராமத்திலிருந்து அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்ற ஏழை மாணவி தற்போது மருத்துவர் ஆவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளதுள்ளார்.

தனது வெற்றி குறித்து இது குறித்து நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த மாணவி சண்முகபிரியா “குக்கிராமத்தில் இருக்கும் நாங்கள் மருத்துவர்களை பார்ப்பதே அபூர்வம், நான் மருத்துவர் ஆவது என்னுடைய விடாமுயற்சிதான். ஏழையோ பணக்காரரோ யாராக இருந்தாலும் நம்பிக்கை இருந்தால் எளிதாக நீட் தேர்வில் வெற்றிபெறலாம்” என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply